Saturday 7 July 2012

பகடைக் காய்களாகும் கலைஞர்கள்

(07-07-2012 அன்று tamilmirror.lk இல் பிரசுரமானது...)

அரசியல் பற்றிய நல்ல அபிப்பிராயம் மக்கள் மத்தியில் இல்லாமைக்கு முழுப்பொறுப்பும் அரசியல்வாதிகளே! அரசியல் பற்றி அடி - நுனி தெரியாத அடியேனுக்கு அரசியலால் பாதிக்கப்படும் கலைஞர்கள் பற்றியும் பேசும் தகுதி ஓரளவுக்கு இருக்கிறது.

மக்கள் விரும்பும் கலைஞர்களை சீண்டுவதன் மூலம் தமக்கான சுய விளம்பரத்தை இலகுவில் பெற்றுக்கொள்ள நினைக்கும் தமிழக அரசியல்வாதிகளின் தந்திரோபாயங்கள் நமக்குப் புதியதல்ல. இலங்கை இனப் பிரச்சினையும் தமிழக அரசியல்வாதிகளின் சுய விளம்பரத்துக்கு காலகாலமாக உதவி வருவது நாங்கள் அறிந்த ஒன்றே.


தமிழ் படைப்பாளிகளையும் கலைஞர்களையும் இலங்கை வரவிடாமல் தடுப்பதால் இவர்கள் சாதிக்க நினைப்பதென்ன என்பது எப்போதும் கேள்விக்குறி தான். கலைஞர்களின் இலங்கை வருகை பெரும்பாலும் தமிழர்களால் தமிழர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளாகவே இருப்பது இலங்கையில் உள்ள எமக்குத் தெரியும். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க நினைப்பதால் இலங்கை அரசாங்கத்துக்கு இவர்கள் சொல்ல நினைப்பது என்ன? தமிழன் சந்தோஷமா இருக்க விடமாட்டோம்... அவன் இலக்கிய அறிவும் கலா ரசனையும் இல்லாமலே போகட்டும் என்பதா? தமிழ் சமூகத்திற்கு நன்மை செய்வதாகக் காட்டிக்கொண்டு, அவர்களின் ரசனையில் மண்ணள்ளிப் போட நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்? 

ஓரிரு முறை இலங்கை அரசால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வந்த மற்றும் வர இருந்த கலைஞர்கள் தடுத்து நிறுத்தபட்டார்கள். அதில் ஒருவித நியாயம் இருக்கலாம். இலங்கை அரசாங்கத்துக்கு அவர்கள் காட்டும் எதிர்ப்பாக அதனை கருதலாம். ஆனால் இங்கேயுள்ள தமிழ் ஊடகங்களாலும் தமிழ் அமைப்புகளாலும் தனி மனிதர்களாலும் ஒழுங்கு செயப்படும் நிகழ்ச்சிகளையும் இந்திய அரசியல்வாதிகள் தலையிட்டுக் குழப்புவதால் இலங்கை அரசுக்கு என்ன செய்தி சொல்ல நினைக்கின்றார்கள்?

சிங்கள அரசை பழிவாங்குவதாக எண்ணி இங்குள்ள தமிழர்களின் ரசனையை சிதைக்க நினைப்பது சுத்த மூடத்தனமாகவே படுகின்றது. பேச வேண்டியவர்களிடம், பேசவேண்டிய தருணத்தில் பேசாது மௌனம் காத்துவிட்டு இப்போது ஒன்றுமறியா கலைஞர்களின் வருமானத்தை தடுத்து அவர்களின் ரசிகர்களை எமாற்றத்துக்குள்ளாக்கி என்ன தீர்வை தர எண்ணுகின்றார்கள் தமிழக அரசியல்வாதிகள் மற்றும் அவர்களால் தூண்டப்படும் இனவாதிகள்? தயவுசெய்து கலா ரசனையை போராட்டம் என்ற போர்வையில் கொச்சைப்படுத்தாதீர்கள். 

இலங்கையில் இன்னமும் தமிழர்கள் வசிக்கின்றார்கள் என்பதை சுத்தமாக மறந்து சிங்களவர்கள் மீது இனத்துவேஷம் வீசிகொண்டிருப்பதால் கலை சம்பந்தமான பல இழப்புகள் இலங்கை தமிழர்களுக்கு தொடர்ச்சியாக நேர்ந்து வருவதை சிந்திக்க தெரியாதவர்களாய் தொடர்ந்தும் குறுகிய மனப்பான்மையுடன் நடக்கும் தமிழக அரசியல்வாதிகளின் காதுகளுக்கு எங்கள் அங்கலாய்ப்பு போய்ச் சேரும் வழி என்ன?

அப்படி இலங்கையை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும் என்று கருதினால் இங்கு திரையிடப்படும் தமிழ் திரைப்படங்களும் தடை செய்யப்பட வேண்டுமல்லவா? திரையில் வரலாம் நேரில் வரக்கூடாது என்று தடை போடுவது நகைப்புக்குரிய விடயம். 

கலைகளும் கலைஞர்களும் எப்போதும் பேதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். மதம், இனம், நாடு என்று பல பேதங்களுக்கு பாலமாக காலகாலமாக கலைகளே இருந்து வந்திருக்கின்றன. இன்று அதற்குள்ளும் நச்சு கலக்க நினைப்பது அபாயகரமானது. 

சிங்கள மொழி பேசும் சகோதர மொழிக் கலைஞர்கள் தமிழ்க் கலைஞர்களுடன் இணைந்து பல்வேறு படைப்புகளை இங்கு செய்து வருகின்ற போது... தமிழ் நடிகைகள் சிங்களத் திரைப்படத்தில் தோன்றுவதை அவர்கள் வரவேற்கும் போது... தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டும் எதற்கு இந்த குறுகிய போக்கு? அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளுடன் அவர்களுடைய நடவடிக்கைகளை வாதித்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும். கலைஞர்களை கேடயமாகவும் பகடைக்காய்களாகவும் மாற்றும் போக்கு மாற வேண்டும்... அல்லது நாம் அதனை மாற்ற வேண்டும்...

No comments:

Post a Comment