Wednesday 11 January 2017

இசைப்புயலுடன் சில நிமிடங்கள்...

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில்  உலகத் தமிழர் திருவிழா அண்மையில் சென்னை ராயல் லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது. உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பு 28 நாடுகளை சார்ந்த தமிழ் பேசும் அரசியல், வர்த்தக மற்றும் கலைத்துறை சார் தமிழர்களை உள்ளடக்கிய அமைப்பாகும். இதன் கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் நானும் விழாவில் பங்குகொண்டேன் .

விழாவின் முக்கிய நிகழ்வாக சாதனைத் தமிழன் விருது மற்றும் உலகத் தமிழன் விருது ஆகியவை சாதனைத் தமிழர்களுக்கு வழங்கப் பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

நம் அன்பு அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல்  ஹமீட் அவர்கள் அடங்கலாக பல்துறை சாதனையாளர்களுக்கு சாதனை தமிழன் விருதுகள் வழங்கப்பட்டன.


உலகத்த தமிழன் விருது இசைப்புயல் ரஹ்மானுக்கு!  விழாவுக்கு எந்த நேரமும் வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே தினம் தன்  ஐம்பதுவது பிறந்த தின நிகழ்வுகளின் இறுக்கத்தால் அவரால் வர இயலாமற் போனது. ஆயினும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நண்பர் செல்வகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விழாவினை முடித்துவிட்டு தன இசைக்கல்லூரியில் தன்னை வந்து சந்திக்கும் படி ரஹ்மான் அவர்கள் கூற இரவு பதினோரு மணிக்கு அவரை சந்திப்பதற்கு அனுமதி கிடைத்தது.

நிகழ்ழ்ச்சியின் ஏற்பாட்டாளரும் ஒருங்கிணைப்பாளருமான செல்வகுமார் அவர்களோடு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த நம் இராஜாங்க கல்வி அமைச்சர் மாண்புமிகு. இராதாகிருஷ்ணன், நோர்வே ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்சாயினி குணரத்தினம் (யாழ்ப்பாணத்தில் பிறந்து ஒஸ்லோ நகரை ஆளும் பெருமைக்குரிய இளம் பெண் இவர் ),  அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட்  அவர்கள், அன்றைய   விழாவினைத் தொகுத்து வழங்கிய கலைஞர் தொலைக்காட்சியின்  "நெஞ்சு பொறுக்குதில்லையே" நிகழ்ச்சி புகழ் ஜோன் தன்ராஜ்  மற்றும் ஷக்தி டிவி புகழ் வினோதினி ஆகியோர் அவருக்கான விருதினை வழங்குவதற்கு  புறப்பட்டுச் சென்றோம்..

KM College of Music and Technology என்று அறியப்படும் அவரது இசைக்கல்லூரி வாசலில் ஏராளமான ரசிகர் கூட்டம் அவர் வெளியே வருவதற்காய் காத்துக்கொண்டிருக்க எங்களை உள்ளே அழைத்துச் சென்றனர்..

Dr.A.R.Rahman என்று பெயர் பொறிக்கப்பட்ட அந்த அலுவலகக் கதவு எங்களுக்காக  திறக்கும் வரை  ஓரிரு நிமிடங்கள் காத்திருந்தோம்.  சரியாக பதினோரு மணிக்கு கதவு திறக்க தனி ஆளாய் அலுவலக வாசலில் தோன்றினார் இசைப்புயல். புன்சிரிப்புடன் அனைவரையும் வரவேற்ற போதும் நாள் முழுவதுமான பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளின் களைப்பு முகத்தில் தெரிந்தது .....



பரஸ்பர அறிமுகங்கள் கைகுலுக்கல்கள் பிறந்தநாள் வாழ்த்துப் பரிமாறல்களின் பின் அவருக்குரிய விருது அவரிடம் கையளிக்கப்பட்டது.. தொடர்ந்து எங்கள் வேண்டுகோளுக்கு இணங்க  காமெராவுக்கு கட்டுப்பட்டு எங்களுடன் சில நொடிகளைக்  கழித்தார்.




அப்துல் ஹமீடட்  அவர்களுக்கும் ரஹ்மான் அவர்களுக்குமான நெருக்கம் நம் அனைவரும் அறிந்தது தான் என்றாலும்.. அன்று அதை நேரில் பார்க்கும் அனுபவம் கிட்டியது.  ஹமீட்  அவர்களைக் கண்டதும் கட்டித் தழுவிக்கொண்ட இசைப்புயல்..."சாப்பிட்டீங்களா?"  என்று விசாரித்தார். சில நொடிகளில் அதே புன்சிரிப்புடன் "சோ டயர்ட்" என்று விடைபெற்றுச் சென்றார்!!





(இப்பதிவு 13-01-2017 "மெட்ரோ நியூஸ்" பத்திரிகையிலும் பிரசுரமானது)


No comments:

Post a Comment