Friday 18 July 2014

அம்மா நலமா? - குறும்படம்

யுத்தம், வன்முறை, இழப்பு, என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன் பொதுவாக நினைவுக்கு வருவது நம் நாட்டில் நடந்துமுடிந்த இனப்போர் தான். ஆனால் எனக்கு உலகம் முழுவதிலும் தினம் தினம் அரங்கேறும் அத்தனை அழிவுகள் பற்றியும் சிந்திக்கத்தோன்றும். இனம் சார்ந்து, மதம் சார்ந்து, நிலம் சார்ந்து என்று யோசிக்காம் மனிதம் சார்ந்து யோசித்தால் இந்தப் போர்கள் மனிதன் தன்னைத் தானே கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துக்கொள்ளும் ஒருவகைத் தற்கொலைத் தாக்குதல் தான்.

வன்முறைகள் நிகழும் போது அதில் அரங்கேறும் சிறிய பெரிய எத்தகைய சம்பவங்களும்  தனிமனித வாழ்க்கைகளில் வரலாறுகளை உருவாக்கிச் செல்கின்றன. அவை பெரும்பாலும் சோக வரலாறுகளே. விழுகின்ற ஒவ்வொரு அடியும், சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தமும் வரலாற்றில் வடுக்களாய் பதியப்படுகின்றன.

உயிர்களையும் உடைமைகளையும் தின்று ஏப்பம் விடும் வன்முறைகள் அடங்கினாலும் அந்த இழப்புகளால் ஏற்படும் எண்ணச் சிதைவுகள் அநேகமாக காலாகாலத்துக்கும் ஓய்வதில்லை. அன்புக்குரியவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இல்லாததை நினைத்தே ஏங்கும் மனித இயல்புக்கு அன்புக்குரியவர்களின் இழப்பு இன்னமும் தீனி போட்டு வாழ்நாள் முழுவதும் இதயத்தில் ஓர் நிரந்தர வெற்றிடத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

“அம்மா நலமா” குறுந்திரைப்படம் போருக்குப் பின்னரான உளவியல் தாக்கங்களில் ஒன்றைப்பற்றி மெலிதாக வருடிச்செல்லும் ஒரு படைப்பு. சொல்ல முடியாத உணர்வுகள் தரும் தாக்கம் ஒருவகை என்றால் சொல்லக்கூடியதாக இருந்தபோதும் வெளிக்காட்ட முடியாத உணர்வுகள் தரும் தாக்கம் இன்னொரு வகை. கதையில் வரும் சிறுமி பாத்திரத்தின் உளத்தாக்கம், மனஅழுத்தம் அத்தனையும் யதார்த்தமாகக் காட்டப்பட்டுள்ளது சிறப்பம்சம்.

இலங்கையில் உருவாகி வரும் நம்பிக்கைதரும் இயக்குனர்களில் ஒருவரான அருள்செல்வத்தின் படைப்பு இது. ஒளிப்பதிவு நவீன், எடிட்டிங் கே.எஸ்.கண்ணன். பின்னணி இசை உருவாக்கம் என்னுடையது. இசை மூலம் நிறைய உணர்வுகளை வெளிக்காட்டும் வண்ணம் அமைக்கபட்ட கதை என்பதால் என்னாலான அளவு முயன்றிருக்கிறேன்….





No comments:

Post a Comment