Saturday 25 January 2014

'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

24-01-2014 அன்று  Metro News பத்திரிகையில் பிரசுரமான எனது கட்டுரை 


பாடல்கள் கேட்­பது பல­ருக்குப் பொழு­து­போக்கு, என் போன்­ற­வர்­க­ளுக்கு அது தொழிலின் ஒரு அங்கம் என்று கூறலாம். அப்­ப­டி­யி­ருக்­கையில் நான் ரசித்த பாடல் என்று ஒரே ஒரு பாடலை நினை­வுக்­குக்­கொண்டு வருதல் போன்ற கடி­ன­மான விடயம் வேறில்லை. இருப்­பினும் கண்ணை மூடி சிந்­தித்த ஒரு கணத்தில் மனதில் உடனே தோன்­றிய மிகப்­பி­டித்த பாடல்­வ­ரி­சையில் ஒன்று 'அடி ராக்­கம்மா கையத்­தட்டு...'

இளை­ய­ராஜா அண்­மையில் ஒரு விடயம் சொல்­லி­யி­ருந்தார்... 'இசையில் பிரம்­மாண்டம் என்­பது நூறு இசைக்­க­லை­ஞர்கள் ஒன்­றாக இசைத்தால் தான் வர­வேண்­டு­மென்­ப­தில்லை. ஒரே ஒரு பாடகன் கூட பாட­லினுள் ஒரு பிரமாண்­டத்தைக் கொண்­டு­வந்­து­வி­ட­லாம்'  அவர் கூறி­யதை அவரே பல­முறை நிரூ­பித்­து­முள்ளார்.


சில விரல்கள் சொடுக்கும் ஒலி.. அத­னோடு எஸ்.பி.பியின் குரல் 'அடி ராக்­கம்மா கையத்­தட்டு' என்று ஒலிக்­கையில்  எந்த இசைக்­க­ரு­வியும் இல்லாமல் ஒரு பிர­மாண்ட அனு­பவம் ஏற்­ப­டு­கி­றது.


மேற்­கத்­திய  Orchestral music இனுள்ளே தமிழ்­வாசம் வீசும் மெட்­டு­க­ளையும் சங்­க­தி­க­ளையும் வாத்­தியப் பிர­யோ­கங்­க­ளையும் இட்டு நிரப்பி மேற்­கத்­திய மற்றும் எங்கள் இசை வடி­வங்­களை ஒரு புள்­ளியில் இணைக்கும் கலையின் முன்­னோடி இளை­ய­ராஜா இந்­தப்­பா­ட­லிலும் தன் உலக இசைய­றிவை காட்டத் தவ­ற­வில்லை.


பாடலின் ஆரம்பம் string வாத்­தி­யங்கள் மட்டும் வேகமாய் ஓடி ஒரு மேற்­கத்­திய  orchestralஇசை­வ­டி­வத்தைக் கேட்­கப்­போ­கிறோம் என்­கிற பிர­மிப்பை உண்­டாக்கும். சில செக்­கன்­களில் அத­னோடு கலக்கும் தாள வாத்­தி­யங்கள் மீண்டும் நம்மை நம் திரை­யிசை வடி­வத்­துக்குள் கொண்­டு­வரும்.

பல வாத்­தி­யக்­க­ரு­விகள் ஒன்றாய் இசைத்­துத்­தந்த பிர­மாண்டம் கெடாமல் முன்னர் சொன்­னது போல் வெறும் விரல்­சொடுக்கும் ஓசை­யுடன் குரல் மட்டும் ஒலிக்கும். குர­லுக்கு சில வய­லின்கள் பதி­ல­ளிக்க 'ஜக­ஜ­கஜா' என்று குரல்கள் சில தொடரும்.


ஆ... என்றோ ஓ... என்றோ லாலா என்றோ வழ­மை­யாக யோசித்­துக்­கொண்­டி­ருக்கும் கால­கட்­டத்தில் இந்த 'ஜக­ஜ­கஜா' என்­கிற யோசனை இவ­ருக்கு எப்­படி வந்­தி­ருக்கும் என்று நான் சிந்­திப்­ப­துண்டு.

வய­லின்­களில் பிர­யோ­கத்­துக்­கேற்ப இந்த ''ஜக­ஜ­கஜா' ஈடு­கொ­டுத்­துப்­போகும். தொடர்ந்தும் விரல்கள் மற்றும் எஸ்.பி.பி, ஸ்வர்­ண­ல­தாவின் குரல்கள்.....கிடைக்கும் சின்னச்சின்ன இடை­வெ­ளி­களில் வய­லின்­களின் சிணுங்­கல்கள்.. பின்பு 'ஜாங்­கு­ஜக்கு' என்று ஆரம்­பிக்கும் குரல்கள். 'ஜா' என்னும் ஒலி வேறெந்தப் பாட­லிலும் இந்­த­ள­வுக்கு கையா­ளப்­ப­ட­வில்லை என்றே சொல்­ல­வேண்டும்.


தொடர்ந்து முதலாவது இடை­யி­சையில் orchestralஇசைக்­கோர்வை பின்னணியில் ஓட மேற்­கத்­திய இசைக்குள் நம்மை முழுதாய் இட்­டுச்­சென்று விடாது தமி­ழி­சைக்­குள்­ளேயே இருக்க வைக்கும் ஒரு தந்­தி­ர­மான இசை­ய­மைப்பு. சரணம் ஆரம்­பிக்க வய­லின்கள் மௌனிக்கின்­றன. தாள­வாத்­தி­யங்­க­ளோடு தேவை­யான சில அடிப்­படை இசைக்­க­ரு­வி­க­ளு­டனும் குரல் பயணித்து 'மத்­த­ளச்­சத்தம்...' என்று ஆரம்­பிக்கும் இடத்தில் பின்­ன­ணியில் மௌனித்த string வாத்­தி­யங்கள் பேச ஆரம்­பிக்­கின்­றன.


பாடலின் இடையில் 'குனித்த புரு­வமும்' என்று ஆரம்­பிக்கும் தேவாரம் ஒரு சிறப்­பம்சம். வேகமாய் வரும் ஒரு வாகனம் வேகத்தை லாவ­க­மாகக் குறைத்து வளை­வொன்றில் திரும்­பு­வது போன்று பாடலின் வேகம் அல்­லது டெம்போ லாவ­கமாய் குறைந்து தேவாரம் ஒலிக்க ஆரம்­பிக்கும்.  'ம்...' என்னும் ஹம்­மிங்­கோடு பாடல் வேறு தளத்­துக்குள் நுழைந்து தேவாரம் ஒலித்­தாலும் அதே ஹம்­மிங்கின் பின்­ன­ணியில் பாடல் தொடர,  பாடல் எந்த இடத்தில் டெம்போ குறைந்­தது எந்த இடத்தில் கூடு­கின்­றது என்ற தடமே தெரியாமல் ஒரு மாயையைக்கொண்டு வருகிறது.



அந்த ஹம்மிங் பின்னணியில் விரல்சொடுக்குகளோடு குரலும் சோந்து பாடலை அழகாய் இறுதிக்கட்டத்துக்கு நகர்த்தி முடிக்கின்றன! இப்படி ஏற்ற இறக்கங்களோடு ஒரு இனிய இசைப்பயண அனுபவம் இந்தப் பாடலை ஒவ்வொரு தடவை கேட்கும்போதும் கிடைக்கும்.






1 comment:

வர்மா said...

வாழ்த்துக்கள்

Post a Comment