Thursday 30 May 2013

இன்னுமொரு வடிவில் 'மகுடி'

வியாழக்கிழமை, 30 மே 2013 22:34 - Tamilmirror.lk இல் பிரசுரமான என் கட்டுரை


நான் இசையமைக்கத் தொடங்கிய காலகட்டத்தில் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்த நம் நாட்டுப் பாடல்களில் ஒன்று 'நம்மூரு மறந்துபோயி பட்டணம் ஓடிப்போனா...' பாடலுக்கு சொந்தக்காரர்கள் டினேஷ் மற்றும் கஜன் ஆகியோர். அன்று தொடக்கம் நான் அவதானித்து வந்த டினேஷின் வளர்ச்சி பற்றியதான பகிர்வு இது.



ராப் (rap) இசைக் கலாசாரம் இலங்கையி;ல் பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் பாத்திய - சந்துஷ் மற்றும் இராஜ் போன்றவர்கள் சிங்கள இசைத்துறையில் ராப் வடிவ படைப்புகளைத் தந்துகொண்டிருந்தபோது எனக்குத் தெரிந்து முற்றுமுழுதாய் தமிழில் ராப் இசையில் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் டினேஷ் - கஜன் மற்றும் கிறிஷான் ஆகியோரே. அதுவும் இந்திய சினிமா இசையில் அந்தளவு ராப் இசைப் பிரயோகம் இல்லாதிருந்த காலகட்டத்தில் துணிந்து அதை நம் ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பெருமை இவர்களைச் சாரும். பல சர்ச்சசைகள் எழுந்த போதும் ராப் இசைக் கலாசாரத்துக்கு உலகளவில் இருந்த இடம் படிப்படியாக உணரப்பட்ட பி;ன்னர் இவர்களைப் பின்பற்றி பல இளையவர்கள் ராப் இசைக்கலைஞர்களாக நம் நாட்டில் உருவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.

நாம் எடுத்துக்கொள்ளும் துறை மீதிருக்கும் அதீத ஈடுபாடு எம்மை நிச்சயம் எம் இலக்குகளை அடைய வைக்கும் என்பதற்கு டினேஷின் வளர்ச்சிப் பாதை நல்லதொரு சான்று. இலங்கையில் தமிழ்க் கலைஞனொருவன் தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக்கொள்ளும் போராட்டம் எத்தகையதென்று எங்களுக்குத் தெரியும். அந்தப் போராட்டத்தில் வெற்றி கண்டு சிங்களக் கலைஞர்களோடும் நிறையவே பணியாற்றி பின்னர் நாடு கடந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாட்டு ராப் இசைக் கலைஞர்களோடு கூட்டு சேர்ந்து பல படைப்புகளை வெளிக்கொண்டுவந்த டினேஷிற்கு 'சுராங்கனி' பாடல் சிங்கள மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதன் தமிழ் வடிவமான 'ஆத்திசூடி' பாடல் மூலமாக இசையமைப்பாளர் விஜய் அன்டனி வழியே தென்னிந்திய இசைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த டினேஷ் அத்துறைக்குள் செல்ல முடிந்த மிக உயரமான இடத்தையும் தொட்டு நிற்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியே.

இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான 'கடல்' திரைப்படத்தின் மகுடி பாடல் டினேஷின் குரலிலேயே ஒலிக்கின்றது. திரையில் படமாக்கப்பட்ட ஒரு பாடல் மீண்டும் புது வடிவில் அப்பாடலைப் பாடிய கலைஞனால் வெளியிடப்படுவது தமிழ் சினிமா இசைத்துறைக்கு ஓரளவு புது முயற்சி தான்.

திரையில் வந்த பாடலை எதற்காக மீண்டும் காட்சிப்படுத்த வேண்டும் என்ற கேள்வியை நான் டினேஷிடம் எழுப்பிய போது 'பின்னணிப் பாடகன் என்ற சொல்லைத் தாண்டி முன்னணிக்கு வருவதற்கே இந்த முயற்சி' என்றார். திரையில் தோன்றும் நடிகர்களின் வாயசைப்புக்குப் பின்னால் உள்ள பாடகர்கள் பின்னாலேயே இருக்கும் கலாசாரம் மாறி அவர்களை முன்னணிக்குக் கொண்டுவரும் இதுபோன்ற முயற்சிகளுக்குத் தான் முன்னோடியாக இருக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். எனவே சோனி நிறுவனத்தோடும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தோடும் கலந்து பேசி 'The Artiste Version of Magudi' என்னும் பெயரில் இப்பாடலை மீண்டும் காட்சிப்படுத்தும் அனுமதியைப் பெற்றுள்ளார்.
J.R.மீடியா வெர்க்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் வெளிவந்துள்ள இப்பாடலின் வீடியோவை பிரபல சிங்கள இசையமைப்பாளரும் பாடகரும் Five Frogs நிறுவனத்தின் உரிமையாளருமான சஜித் பீரிஸ் இயக்கியுள்ளார்.

சோனி நிறுவனத்தின் VEVO முறைமூலம் வெளிவரும் முதல் இலங்கைப் படைப்பு என்ற பெருமையும் இப்பாடலைச் சேரும்.

No comments:

Post a Comment